Wednesday, June 2, 2010

மதுரை - அழகர் கோவில்



மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த கோவில் அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருகின்றது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.




மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து இங்கே செல்வதற்கு வாகன வசதி கோவில் நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது.


அழகர் மலையில் கடவுள்களை காண்கிறோமோ இல்லையோ, நமது முன்னோர்கள் நிறையபேரைக் காணலாம். மலை முழுதும் குரங்குகள் தான். கையிலே உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. உரிமையுடன் பிடுங்கிக்கொள்வார்கள். மூலிகை வனத்திற்கு பக்கத்தில் ஒரே மரத்தில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்களைக் காணலாம். பச்சை பசேலென்று இருக்கும் அழகர் கோவில் மதுரை இளைஞர்களின்(காதலர்களின்) முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. அழகர் திருவிழா(சித்திரைத் திருவிழா) பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

1 comment:

  1. அருமையான பதிவு, அழகர் கோவில் வர ஆவலாக உள்ளது.

    ReplyDelete